அம்மா
கோபிசெட்டிபாளையத்தில்
பிறந்து சில வருடங்களில் தாத்தாவின் மறைவிற்கு பிறகு மாமாக்கள் கோவை
சென்னை என இரண்டு ஊர்களுக்கு வேலைக்கு செல்ல, குடும்பம் கோவைக்கு
மாற்றலானது. 7 பேர் கொண்ட பெரிய குடும்பம். பாட்டியும் அம்மாவும்
கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறி ட்ரெயின் பிடித்தனர்.
பெரியம்மாவின்
(அம்மாவின் அக்கா) திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்வியல்
நடைமுறைகளைக் கண்ட பாட்டி, கண்டிப்பாக பட்டணத்து மாப்பிள்ளைக்கு இரண்டாவது
பெண்ணை (அம்மாவை) திருமணம் செய்து கொடுப்பதில்லை என முடிவு செய்து
மும்மரமாக மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினார். இதனாலேயே அப்பாவுக்கு
யோகம் அடித்தது எனலாம்.
அப்போது இரண்டாவது பெரியப்பா
(அப்பாவின் அண்ணா) எப்படியோ இந்த தகவலை தெரிந்துகொண்டு பாட்டியை
சந்தித்துப் பேச, சீக்கிரமே பீபீப்பி டும்டும்டும். அப்பாவுக்கு ஜோதிடம்
தெரியும். ஆனால் இந்த வரனையும் பொருத்தமில்லை என்று சொல்லி
தட்டிக்கழிக்கக்கூடும் என்பதால், கடைசிவரைக்கும் அம்மாவின் ஜாதகத்தை
அப்பாவிடம் காட்டவேயில்லை.
திருமணத்திற்குப் பிறகு ஜாதகத்தைப்
பார்த்தால், ஒரே ஒரு பொருத்தம் மட்டுமே இருந்தது. ஏழாம் பொருத்தம்.
கேட்கவும் வேண்டுமா.. சண்டைகளும் சமாதானங்களுமாக சென்(றுகொண்டிருக்கி)றது
வாழ்க்கை. அப்பாதான் வீட்டின் கடைக்குட்டி. மூன்றாவது மருமகளாக அடியெடுத்து
வைத்தார் அம்மா. விவசாயக் குடும்பம் ஆதலால், வீட்டில் மாடுகள் இருந்தன.
வயல் வேலைகளுக்கு காளைமாடுகள், வீட்டின் பால் தேவைகளுக்கு பசுமாடுகள் என,
பத்துப்பதினைந்து மாடுகள் உண்டு.
ஸ்டவ் கிடையாது. விறகு
அடுப்புதான். அதுவும், பருத்திமாரும் மிளகாய்மாரும் தான் பெரும்பாலான
சமயங்களில். இரண்டு பெரியப்பாக்களும் வேலைநிமித்தம் குடும்பத்துடன்
வெளியூர் செல்ல, எல்லா பொறுப்புகளும் (வேலைகளும்) அம்மாவிடம் தான். கோவில்
கைங்கர்யம் வேறு இருந்ததால், அந்த வேலைகளும் சேர்த்து பெண்டு
நிமிர்ந்துவிடும்.
காலாண்டு லீவுக்கு கார்த்திகை தீபம்,
அரையாண்டுக்கு மார்கழி தை, முழுஆண்டுக்கு சித்திரை (வருடப்பிறப்பு,
சித்திரை பௌர்ணமி உத்சவம்) என கோவில் விழாக்கள் வரிசைகட்டி வரும்.
லீவுக்கென்று உறவினர் வீடுகளுக்கோ வெளியூர்களுக்கோ சென்றது சொற்பம் தான்.
காலையில்
4 மணிக்கு தொடங்கும் அம்மாவின் தினப்படி வேலைகள், இரவு 9 மணிவரை தொடரும்.
4.15 - 4.30க்குள் கறவைக்காரர் வந்துவிடுவார். மாடுகள் முரண்டு பிடித்து
உதைக்காமல் இருக்க, மூக்கணாங்கயிறைப் பிடித்துக்கொண்டு, நிற்கவேண்டும். அது
முடித்து வாசல் தெளித்து கோலம்போட்டு, பிறகு சமையல்கட்டு வேலைகள்.
என்னையும் தங்கையையும் பள்ளிக்கு தயார் செய்து பஸ் ஸ்டாண்டில் விட
வேண்டும்.
வீட்டிற்கு திரும்பியதும் மாடுகளுக்கு நீர் காட்டி,
தீவனம் வைக்க வேண்டும். அடுத்தது துணிமணி, துவைத்து அலசி பிழிந்து
காயப்போடுவதற்குள், மாடுகள் அடுத்தகட்ட வேலை வைத்திருக்கும். கொட்டத்திற்கு
சென்று சாணியை அப்புறப்படுத்தி, தீவனம் தேவையென்றால் பார்த்து வைத்து
வந்தால், மாலையாகிவிடும். நாங்கள் இருவரும் பள்ளியிலிருந்து வந்துவிடுவோம்.
இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் வந்தால், பணமிருந்தால் கொடுத்து அல்லது
பதில் சொல்லி சமாளித்து அனுப்பவேண்டும். யாரேனும் ரொம்ப கறாராக பேசினால்,
இரவு அப்பா வந்தவுடன், அந்தக் கடனை சீக்கிரம் கட்ட ஏற்பாடு செய்யுங்கள்,
என்று மட்டும் சுருக்கமாக முடித்துவிடுவாள்.
ஆட்டை தூக்கி
மாட்டுல போட்டு, மாட்டை தூக்கி ஆட்டுல போட்டு என, எப்படியோ தட்டுத்தடுமாறி
எங்களை படிக்கவைத்தார்கள். நான் வேலைக்கு போக ஆரம்பித்தவுடன் கொஞ்சம்
மூச்சுவிட நேரம் கிடைத்தது அம்மாவுக்கு. இத்தனை நாள் இடைவிடாது ஓடிய
ஓட்டத்தால் உடல் சோர்வடைந்தது. இதற்கிடையில் எனக்கும் அப்பாவுக்குமான
சண்டைக்கு அரசமரம் சொம்பு இப்படி எதுவுமில்லாமல், பைசல் செய்துவைப்பாள்.
நான் வேலைக்கு சென்றபிறகு மாடுகள் வேண்டாம் என அப்பாவிடம்
சண்டையிட்டிருக்கிறேன். பிறகு ஒருவாறு மாடுகள் பிரியாவிடை பெற்று,
குடும்பத்துடன் எங்கள் கொட்டத்தை காலிசெய்து வேறொரு எஜமானரிடம் தஞ்சம்
புகுந்தன.
கடமைகளை ஒவ்வொன்றாக முடித்து, அப்பாடா இனி
ஓய்வெடுக்கலாம் என நினைக்கையில் அடுத்த பிரச்சனை. மனதளவில் மிகவும்
பாதிக்கப்பட்டாள் அம்மா. பணமில்லாது கடனில் வாழ்க்கை ஓடி எத்தனையோ
இன்னல்களை சந்தித்த காலங்களில் கூட கண்கூடிய தூக்கம், அந்தப் பிரச்சனையால்
கண்காணாமல் போனது. இப்போது மீண்டும் எல்லாம் ஒருவாறு சரியாகி காலம்
கொஞ்சமே கொஞ்சம் கனிவுடன் எங்கள் குடும்பத்தைப் பார்க்கிறது.
அம்மாவுக்கென்று
நான் எதுவும் செய்ததில்லை. அவளுடைய ஆசைகள் என்னவென்று கூட நான்
கேட்டதில்லை. அதிகபட்சம் ஒன்றிரண்டு செல்போன்கள் வாங்கி
கொடுத்திருக்கிறேன். அவ்வளவே. எங்களுக்காக தன்னையே தியாகம் செய்து, தன்
ஆசைகளைப் புதைத்து இத்தனை ஆண்டுகால வாழ்க்கையை கடத்திவிட்டாள்.
இனி
அம்மாவுக்காக என்ன செய்யப்போகிறேன் என தெரியாது. இப்போதைக்கு பிறந்தநாள்
வாழ்த்துகள் மட்டும் சொல்ல முடியும். உடல் பலம்பெற்று இளமை திரும்பவோ,
தேய்ந்த முட்டி எலும்புகள் வலுப்பெறவோ வாய்ப்புகள் இல்லை. ஆனால்
மனதளவிலாவது சந்தோஷமாக, வளம்பெற்றிருக்க வேண்டும் என இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.
Comments
Post a Comment