ஜன்னலோரம்... 1

ராஜவேல் புதிய வேலை கிடைத்து இந்த ஊருக்கு வந்திருந்தான். ஊர் மட்டுமல்ல நாடே புதியது தான். பிளைட் ஏறுவது என்னவோ பழகிப்போன ஒன்று என்றாலும் வெளிநாடு செல்வது இதுவே முதல்முறை.

முதன்முதலில் தன் சொந்த ஊரான கருமாத்தூரை விட்டு சென்னை போனதுவே சாதனை தான். பள்ளிக்கூடம், காலேஜ் எல்லாமே கருமாத்தூர் தான். புனித கிளாரட் ஸ்கூல் பிறகு அருளானந்தர் காலேஜ். வாராவாரம் திருப்பரங்குன்றம், மாதம் ஒரு தடவையோ 2 தடவையோ மதுரை. இவ்வளவு தான் அதிகபட்சம் அவன் வெளியே சென்றது.

சென்னையில் வேலை கிடைத்துக் கிளம்பும்போது அவன் அம்மா "எம்புள்ளைக்கு இந்த ஊரை விட்டா எதுவும் தெரியாதே.. திக்கு தெரியாத ஊர்ல எப்படிப் பொழைக்கப் போகுதோ.. எய்யா வேலு நீ போகவேணாம் ராசா" என்று அழுது அரற்ற, வீதியே திரண்டுவிட்டது. அழகர் கோவிலுக்கு குடும்பத்துடன் போய், பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு படையலிட்டு, வானுக்கும் மண்ணுக்குமாய் நிற்கும் அரிவாள்களைத் தொட்டு, அங்கேயே கயிறு (தாயத்து) வாங்கி இவனுக்கு கட்டிய பிறகு தான் கொஞ்சம் தெம்பாயிருந்தாள். அப்பா சமாதானப்படுத்தி இவனை அனுப்பிவைத்தார். அவருக்கும் உள்ளூரக் கொஞ்சம் கலவரம் தான் என்றாலும், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எப்படியும் சமாளிச்சிருவான், என்று நம்பிக்கை.

7 வருடங்கள் போனதே தெரியவில்லை. 2 முறை டெல்லிக்கும் சிலபல முறைகள் குர்கானுக்கும் மும்பைக்கும் சொய்ங்... அப்பா அம்மா தம்பியை மதுரையிலிருந்து சென்னைக்கு பிளைட்டில் கூட்டிப் போனான். பிளைட் கிளம்பியதும் பயந்து கூச்சல்போட்டு கத்திய அம்மாவை, ஒரு கட்டத்தில் கடுப்பாகி "கத்தினா கதவை தொறந்து தள்ளிவிட்ருவேன்" என்று பயமுறுத்தி அமைதியாய் உட்காரவைத்தான். ஆனால் அதற்குள் அந்த 3 ஏர்ஹோஸ்டஸ் பட்ட பாடு...

இவன் வேலை செய்த கம்பெனியின் க்ளையண்ட் கம்பெனி இவனது திறமை பிடித்துப்போய் ஆபர் லெட்டர் அடித்தார்கள். அம்மாவிடம் வெளிநாட்டு வேலை-னு சொன்னா எங்கே திரும்பவும் ஊரைக்கூட்டிடுவாளோ-ன்னு பயந்து "பம்பாய்-ல வேலை"-னு சொல்லி சமாளித்தான். அப்பாவிடம் மட்டும் உண்மையை சொல்லிவிட்டான். "பாத்து சூதானமா இருந்துக்கப்பா" என்று சொன்னார். அவ்வளவே.
 
வந்து ஒரு வாரம் ஹோட்டல் வாசம். தமிழ் மக்கள் நிறையபேர் இருந்தனர். வீதியில் இறங்கினால் மலையாளத்துக்கு அடுத்தபடியாக தமிழ் பேசுமளவிற்கு அத்தனை பேர். சேட்டன்கள் தான் பெரும்பான்மை கடை முதலாளிகள் என்பதால் கடைகளில் நுழைந்து சாமான்களை தமிழிலிலேயே கேட்கலாம். அலுவலகத்தில் ஓரிரு தமிழ் நண்பர்கள் கிடைத்தனர். அவர்கள் உதவியுடன் வீடு தேட ஆரம்பித்தான்.
 
தன் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு கிடைத்தது. பகலில் லைட் போட தேவையில்லாத அளவிற்கு நல்ல வெளிச்சம். ஒரு சிங்கிள் கட்டில் மெத்தை, 2 பிளாஸ்டிக் சேர், ஒரு குக்கர், 4-5 பாத்திரங்களுடன் இனிதே பால் காய்ச்சும் வைபவம் நடந்தேறியது. அதிகாலை முழித்ததும் சூரிய வெளிச்சம் பார்ப்பது அவனுக்கு பிடித்த விஷயம். இந்த ஊரில் அதிகாலை 4.30-5.00 மணிக்குள் விடிந்துவிடும். அதுவும் வீட்டிற்குள்ளேயே சூரிய வெளிச்சம் வந்தால் கேட்கவும் வேண்டுமா. 
 
இதற்காகவே ஜன்னல் ஓரமாக கட்டிலை போட்டுக் கொண்டான். ஜன்னல் என்றால் நம்மூர் ஜன்னல் மாதிரி 2x2 எல்லாம் இல்லை. ஆளுயரத்தில் நல்ல ஆஜானுபாகுவான ஜன்னல். இருவர் சேர்ந்தால் தான் ஜன்னல் கண்ணாடியை கழட்ட முடியும். அத்தனை பெரியது. அதன் வழியே சூரிய வெளிச்சம்.. கற்பனை செய்து பாருங்கள் எத்தனை அழகாக இருக்குமென்று...
 
https://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/78/55/07/twin-room-single-bed.jpg
 
அப்பாவிடம் பேசும்போது மிகவும் சந்தோஷப்பட்டார். அம்மாவிடம் பேசிவிட்டு வைக்கும்போது, "மறக்காம எலுமிச்சம்பழம் நறுக்கி குங்குமம் தடவி கருப்புக்கு வெச்சுரு ராசா" என்றாள். மறுநாளைக்கு லெமன் ரைஸ் என்று முடிவு செய்துகொண்டு கடைக்குப் போய் 4 எலுமிச்சை, அப்படியே பால் மோர் இன்னும் சில-பல-சரக்கு வாங்கிவந்தான். காலையில் குளித்து, சாமி கும்பிடும்போது எலுமிச்சை நறுக்கி வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்து, ப்ரிட்ஜில் வைத்துவிட்டான்.

இரவில் ஏனோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். வெகுநேரம் கழித்து தூங்கினான். ஏதோ பயங்கரமான கனவு கண்டு திடுக்கிட்டு முழித்தான். மணி 4.25 ஆகியிருந்தது. சூரியன் தன் பளீர் கிரணங்களை அப்போது தான் பரவ விட்டிருந்த நேரம். அதைப் பார்த்து அப்படியே ஒன்றும் தோன்றாமல் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான். பிறகு எழுந்து வேலைகளை ஆரம்பித்தான். குளித்துவிட்டு வந்து ஒரு ஊதுபத்தியை ஏற்றிவிட்டு எலுமிச்சையை எடுத்தான். ப்ரிட்ஜில் இருந்து எடுத்த எலுமிச்சையாகையால் தோலில் நீர்ப்படலாம் இருந்து, இவன் நறுக்கும்போது நழுவிக்கொண்டு விழுந்துவிட்டது. எடுத்து துடைத்துவிட்டு நறுக்கிவிட்டுப் பார்த்தால், குங்குமம் தடவாமலேயே சிவந்திருந்தது. அப்போது தான் இவன் விரலில் வெட்டி ரத்தம் வருவதை கவனித்தான். உடனே ஒரு ஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டான்.
 
ஆபீஸ் போகும் வழியில் ஒரு பேன்டேஜ் வாங்கி காயத்தின் மேல் போட்டுக்கொண்டான். இவன் சோர்வாக இருப்பதையும் விரலில் பேண்டேஜ் சுற்றியிருப்பதையும் கவனித்த நண்பர்கள் விசாரிக்க, தூங்காததையும் எலுமிச்சை கதையையும் சொன்னான். புது இடம்.. அதனால தான் தூக்கம் வந்திருக்காது. 1-2 நாள்ல சரியாகிடும் என்றனர். இவனுக்கும் அவர்கள் சொல்வது சரியென்று தோன்றியது.
 
இரவு வந்து  படுத்தான். முதல் நாள்  உறங்காததும், ஆபீசில் ஓய்வில்லாமல் எச்சகச்ச வேலையாக சேர்ந்து அசத்த, முரட்டுத் தூக்கம் தூங்கினான். யாரோ வயிற்றில் வருடுவது போல தோன்ற, முழிப்பு வந்தது. மணி 4.40 ஆகியிருந்தது. சூரிய கிரணங்களைப் பார்த்து புன்னகையுடன் எழுந்து வேலைகளை ஆரம்பித்தான். குளித்துவிட்டு வந்து ஒரு ஊதுபத்தியை ஏற்றி கருப்பசாமியை மனதில் நினைத்துக்கொண்டான். அழகர் கோவிலும், ஆளுயர அரிவாள்களும் மனதில் தோன்ற ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது.

புது வீட்டில் ஒரு வாரம் ஓடியது. மெதுமெதுவாக அந்த ஊருக்கும் ஆபீசுக்கும் இவன் வாழ்ந்த பகுதிக்கும் பழகிக்கொண்டிருந்தான். இரவில் தூங்கும்போது மட்டும், ஒரு முறையாவது ஏதோ குளறுபடி இருந்துகொண்டே இருந்தது.
 
அமாவாசை நெருங்கிக் கொண்டிருந்தது.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2