ஜன்னலோரம்... 3
ஒரு
நாள் அலுவலகத்தில் லேட்டாகிவிட, நள்ளிரவுக்கு மேல் வீட்டிற்குப் போக
முடியாமல் ஆபீஸிலேயே இருக்க நேரிட்டது. எப்போது தூங்கினான் என்றே தெரியாது.
தன் ஆபீஸ் சேரில் டேபிள் மேல் கால் நீட்டி தூங்கிவிட்டான். காலையில்
ஆபீஸ்-பாய் வந்து எழுப்பியவுடன் திடுக்கிட்டு விழித்தான். ஆபிஸேலேயே சும்மா
பேருக்கு பல் துலக்கிவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் ஹோட்டலில் காலை
டிபன் முடித்துவிட்டு வந்தான். படுத்தான். அவ்வளவு தான் தெரியும்.
முழித்துப் பார்க்கும்போது மாலை 5.30 மணி.
ஒரு
டீ-யை போட்டுக்கொண்டு வந்து ஜன்னலருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டே
உறிந்தான். ஊருக்குப் பேச நினைத்து போனை எடுத்து நோண்டிக்
கொண்டிருக்கும்போது தான் நேற்றிலிருந்து வயிற்றுவலி இல்லாதது நினைவுக்கு
வந்தது. ஒருவேளை இந்த வீட்டில் தான் பிரச்சனை இருக்குமோ என்று தோன்றிய அந்த
நிமிடம், லேசாக பயமும் ஒட்டிக்கொண்டது.
சோதித்துப்
பார்க்க முடிவு செய்து, மேனேஜரிடம் பேசி அன்று மட்டும் நைட் ஷிப்டுக்கு
அனுமதி வாங்கினான். ஆபீஸ் போய்விட்டு மறுநாள் காலை வீட்டிற்கு வந்தான்.
படுத்தான். தூங்கினான். வயிற்றுவலி இல்லை. அடுத்த 2 நாளும் வாரயிறுதி
விடுமுறை. இரவு வீட்டில் தூங்கவேண்டும் என்று நினைத்தவுடனேயே வயிறு
வலிப்பது போல இருந்தது. அதனால் பகலில் தூங்காமல் எப்படியோ சமாளித்து இரவில்
ஒரு மருந்துக்கடையில் கெஞ்சி கூத்தாடி, தூக்கம் வரும் இருமல் மருந்து
வாங்கிவந்து 2 ஸ்பூன் குடித்துவிட்டு படுத்தான்.
ம்ஹ்ம்.. அன்று அமாவாசை. ஜன்னல் வழியே வந்த கையால் வயிற்று வலி வந்ததே தவிர தூக்கம் வரவில்லை. அடுத்தவாரம் தொடங்கி
ஆபிசில் பேசி முடிந்த அளவுக்கு நைட் ஷிப்டு வேலையில் தொடர்ந்தான். பகல்
ஷிப்டு வரும் நாட்களிலும் வீட்டிற்க்கே வராமல் அலுவலத்தில் எவ்வளவு நேரம்
முடியுமோ அவ்வளவு நேரம் கழித்தான்.
---
எட்வின் பார்க்கும்போதெல்லாம் கல்யாணம் செய்துகொள்ளும்படி தன்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்ததும், "பாரு, எனக்கு கல்யாணம் நடந்திருந்தா அது எப்பவோ நடந்திருக்கும். கேஸ்டிலோ செத்ததுக்கு அப்பறம் எனக்கு அந்த எண்ணமே இல்லை. இனியும் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை பண்ணாத" என்றாள்.
"மிக்கேலா, அந்த மார்க்கோ கல்யாணம் ஆனவன்.. குழந்தை இருக்கு. உன்னோட லிவிங் டு-கெதர்-ல இருந்துட்டே இன்னும் நிறைய பொண்ணுங்க கிட்ட பழகிட்டு இருக்கான். அவன் உன்னை ஏமாத்திட்டு இருக்கான்" என்றான்.
"தெரியும். ஆனா அதே மாதிரி நான் யார் கூடப் போறேன்.. என்ன பண்றேன்-னும் அவன் கேக்கறது இல்லை. இந்த வீட்டுக்குள்ள வந்துட்டா லிவிங் டு-கெதர். மத்தபடி அவனோட ஸ்பேஸ்-ல நான் தலையிட மாட்டேன். என்னோட ஸ்பேஸ்-ல அவன் தலையிட மாட்டான். ஏதோ நல்லா பேசுறியேன்னு தான் உன்கூட பழகினேன். மத்தபடி கல்யாணம் பண்ணிக்கற ஐடியா எல்லாம் இல்லை. இனி அப்படி ஒரு எண்ணத்தோட இந்தப் பக்கம் கூட வராதே".
எட்வினுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. மிக்கேலாவை மார்க்கோ ஏமாற்றுகிறான் என்பதை காட்டிலும், மிக்கேலா தான் ஒன்றும் அத்தனை நல்லவள் இல்லை என்று தன் வாயாலேயே சொன்னது இவனால் பொறுக்க முடியவில்லை. அவளைப் பற்றி இவன் மனதில் இருந்த பிம்பம் உடைந்து நொறுங்கியது. என்ன செய்வதென்று தெரியவில்லை. "உன்னை.. உன்னை..." என்று சொல்லிக்கொண்டே கையை நீட்டி ஏதோ சொல்ல நினைத்தான். ஆனால் என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. ஆத்திரத்துடன் அங்கிருந்து நேராக bar-க்குப் போனான்.
---
ஒருநாள் இரவு ஆபிசிலிருந்து லேட்டாக வந்தபோது, உள்ளே நுழைந்தவுடன்
ஏதோ பொறி தட்ட, ஜன்னல் பக்கத்தில் கட்டில் இருப்பதால் தானே அந்தக் கை
வருகிறது.. வயிற்றுவலியும் வருகிறது என நினைத்து, கட்டிலை ரூமின் மற்றொரு
மூலைக்கு இழுத்துப்போட்டான். "கருப்பு... நீதான் காப்பாத்தணும்" என்று வேண்டிக்கொண்டு உறங்கப் போனான்.
பகலில் சாந்தமாக இருக்கும் வீடு, இரவானால் டெரராகிவிடும்... இது இப்போது வரை ராஜவேலுக்கு தெரிந்திருக்கவில்லை.
மறுநாள்
காலை வாசல் கதவை யாரோ உடைப்பது போல தட்டினார்கள். அரக்கப்பரக்க எழுந்து
போய் கதவை திறந்தான். கீழ் வீட்டு எத்தியோப்பியன் பெண்மணி கோபமாய் நின்று
கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் "ஏன்டா
ராத்திரியெல்லாம் பர்னிச்சரை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நகர்த்தி சத்தப் படுத்தின? என் குழந்தை தூங்கவேயில்லை" என்று கத்திவிட்டு சென்றாள். ஒரே ஒரு தடவை அதுவும் முடிஞ்ச அளவு சத்தமில்லாம தானே கட்டிலை நகர்த்தினேன், அதுக்காகவா
இந்தக் கத்து கத்துது இந்தப் பொம்பளை என்று நினைத்துக்கொண்டே பெட்ரூமைப்
பார்த்தவன், அரண்டுவிட்டான். கட்டில் மீண்டும் ஜன்னல் பக்கத்தில் இருந்தது.
எழுந்தபோது, கதவை திறக்கப்போகும் அவசரத்தில் இதை கவனிக்காமல்
போயிருந்தான்.
இந்தக் கலவரத்தில் கருப்பசாமியை வேண்டிக்கொண்டதையோ, வயிற்றுவலி இருந்ததா இல்லையா என்பதையோ நினைத்துப்பார்க்கும் மனநிலையில் அவன் இல்லை. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆபீஸ் போவதற்காக இறங்கிவிட்டான்.
அடுத்த 2 வாரம் முழுக்க நைட் ஷிப்டு. பகலில் நன்கு விடிந்த பிறகு தான் வருவான். பயத்துடன் வீட்டிற்குள் நுழைந்து எல்லாப் பொருளும் அந்தந்த இடத்தில் இருக்கிறதா என்று பார்ப்பான். பெட்ரூம் செல்வதை முடிந்த அளவு தவிர்த்து, ஹாலில் படுக்க ஆரம்பித்தான். வயிற்றுவலி பிரச்சினையில்லாமல் தூங்கினான்.
அமாவாசை நெருங்கிக் கொண்டிருந்தது.
Comments
Post a Comment