அது ஒரு கொரோனா காலம்
ஆதி மனிதனின் கற்காலம்.. சில பல அரசர்களின் பொற்காலம்.. வரிசையில், எதிர்வரும் ஆண்டுகளில் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இந்த கொரோனா காலம்.
அப்படி என்ன விசேஷம் என கேட்பவர்களுக்கு, அப்படி என்ன இல்லையென நாக்குமேல பல்லைப் போட்டு கேட்குமளவுக்கு எச்சகச்ச விசேஷங்கள் இருக்கிறது இந்தக் கொரோனா காலத்தில்.
கொரோனா தொற்று வராதவர்களுக்கு பல பிரச்சனைகள் என்றால், நோய்த்தொற்று வந்தவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுடன் சேர்த்து இன்னும் ஒரு பிரச்சனை... அவ்வளவே. லாக்-டவுன், சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தம், உள்ளூரில் சிலபல கிலோமீட்டர் சுற்றளவுக்கு மேல் செல்ல தடை, மார்க்கெட் மூடல், டாஸ்மாக் மூடல், ஒர்க் ப்ரம் ஹோம், அதுவும் கணவன் மனைவி இருவருக்கும் ஒர்க் ப்ரம் ஹோம், குழந்தைகளுக்கு ஆன்லைன் ஸ்கூல்.. இதையெல்லாம் தாண்டி கைக்கு க்ளவுஸ்.. முக்கியமாக முகத்துக்கு/மூக்குக்கு மாஸ்க்.
மாஸ்க் போடுவது என்ன அவ்வளோ பெரிய பிரச்சனையா என்று நினைக்க வேண்டாம். காற்று போகும் அளவுக்கு லூஸாகவும், கொரோனா கிருமி போக முடியாத அளவுக்கு டைட்டாகவும், நாசித் துவாரத்துக்கு குறைந்தது ஒன்னரை இன்ச் மேலே தொடங்கி, நாடிக்கு ஒன்னரை இன்ச் கீழே வரைக்கும், இரண்டு பக்கங்களிலும் காது வரைக்கும் கவர் ஆகும் அளவுக்கு மாஸ்க் போடவேண்டும். முழுமூச்சாக முயற்சி செய்தால் மட்டுமே, முழுமூச்சாக இல்லாமல், அரை மூச்சு முக்கால் மூச்சு விடமுடியும்.
அதுவும், மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு மாஸ்க் போடுவது மாதிரி ஒரு கொடுமையில்லை. மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு கண்ணாடி போட்டதும், மூச்சு விட ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையும் ஆரம்பமாகும். ஜில்லென ஏசி போட்ட ரூமிலிருந்து, பளீரென பல்லைக்காட்டிக் கொண்டு அடிக்கும் வெயிலில் வெளியே வந்தவுடன் மூக்குக் கண்ணாடியில் ஆவி படியுமே, அந்த மாதிரி மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு மூச்சுவிடும் போதெல்லாம் படியும். ஆம்.. ஒவ்வொரு தடவை நீங்கள் மூச்சுவிடும்போதும் படியும்.
வீட்டிலிருக்கும் போதோ ஏற்கனவே தெரிந்த முகங்களைப் பார்க்கும் போதோ இந்தப் பிரச்சனை வந்தால் பரவாயில்லை. அட.. அது ஒரு பிரச்சனையே இல்லை என்றே சொல்லலாம். புதிதாக ப்ரெஷ்ஷாக கொஞ்சமே கொஞ்சம் புஷ்டியாக ஏதாவது புது முகங்களைப் பார்த்தால் கண்ணுக்கு நல்லது என்று டாக்டர் சொல்லியிருக்கிறபடியால், பார்க்கலாமே என்று முயற்சிக்கும் நேரத்தில், அதற்குத் தங்கமணி தடை போடுவது போதாதென்று இந்த கண்ணாடியில் ஆவி திரை போல் படிந்து தடை போடும் சமயத்தில் வரும் பாருங்கள் ஒரு எரிச்சல்... (தங்கமணி இதைப் படிப்பார் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.. மேலதிக விபரங்களுக்கு, நேரில் வரவும்)
ஆனால், பெரும்பாலும் அந்த முகங்களும் மூக்கு மேலே மாஸ்க் போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பதால், கண்ணும் கண்ணும் நோக்கியா மட்டும் தான்... ஹ்ம்ம்ம் என்று பெருமூச்சு கூட விடமுடியாமல், மாஸ்க் அதுக்கு மேல், மூக்கு கண்ணாடி. வெரி டெலிகேட் பொசிஷன்...
திரும்பிய பக்கமெல்லாம் மாஸ்க் மயம்தான். டிசைனர் மாஸ்க் வந்தாலும் வந்தது... பிளவுஸ் மேட்சிங்குக்கு அடுத்தபடி இந்த மாஸ்க் மேட்சிங் தான் இப்போ ட்ரெண்டிங். இதே டிசைன்-ல வேற கலர் இருக்கா.. இதே கலர்ல வேற டிசைன் இருக்கா என்ற ட்ரேட்மார்க் வசனம், இனி புடவை கடைகளுக்கு மட்டும் சொந்தமில்லை.
மாஸ்க் பரோட்டா கொரோனா தோசை எல்லாம் போட்டு, நம்ம மக்கள் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்தால் கொரோனா-வே "உன்னால ஊருக்குள்ள எனக்கிருந்த மரியாதையே போச்சு" என்று நினைக்கும்.
இப்படியெல்லாம் இத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும் மாஸ்க் போட்டு, ஆவி படிய கண்ணாடி போட்டுக்கொண்டு, கிட்டத்தட்ட 1 வருடமாக பொத்திப் பொத்தி காப்பாற்றிவந்த என் மூக்கை...
கொரோனா முடியுமா தொடருமா தெரியாது..
இந்தக் கதை கண்டிப்பாகத் தொடரும்..
Comments
Post a Comment