ஜன்னலோரம்... 2
ராஜவேல் இருந்த வீட்டில் இதற்கு முன் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு ஜோடி இருந்தார்கள், மார்க்கோ - மிக்கேலா.
கல்யாணம் கட்டிக்கொண்டு ஓடிப்போகவோ அல்லது ஓடிப்போய் கல்யாணம்
கட்டிக்கொள்ளவோ அவசியம் இல்லாத அளவுக்கு லிவிங் டு-கெதர் வகையறாவில் ஊறித்
திளைத்தவர்கள் அந்நாட்டவர்கள். அந்த தேசத்திலிருந்து வந்த இந்த இருவரும்
அப்படியான லிவிங் டு-கெதர் வகையறாதான் என்பது இப்போது உங்களுக்கே
புரிந்திருக்கும்.
உனக்காகவே
நான் எனக்காகவே நீ என்று வீட்டு சாப்பாட்டோடு வாழ்ந்தாலும், அவ்வப்போது
இருவரும் தனித் தனியே ஹோட்டல் சாப்பாடும் சாப்பிட்டு வந்தனர். கல்யாணம்
செய்துகொள்ளவில்லை என்பது இந்த விஷயத்தில் இருவருக்கும் வசதியாகவே
இருந்தது. மார்க்கோவுக்கு ஊரில் கல்யாணமாகி 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது.
இது மிக்கேலாவுக்கும் தெரியும். ஆனாலும் சொந்த ஊரை விட்டு வந்தது முதல் டிசைன் டிசைனான கஷ்டங்கள் பலவற்றையும் அனுபவித்து வாழ்வில் பக்குவப்பட்டு விட்டதால்,
இந்த ஷேரிங் வீட்டில் கேரிங்கோடு இருந்தார்கள். விதி-யின் உருட்டு அப்படி.
மிக்கேலாவுக்கு கல்யாணம் எதுவும் நடந்ததில்லை... ஒருமுறை கூட. அவளுக்கு அதில் நம்பிக்கையுமில்லை. இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை.
வேறொரு நாட்டில் வசிக்கையில் ஒரு அமாவாசை நாளில் நடந்த விபத்தின்போது தன் கண் முன்னே
காதலன் இறந்து போக, அந்த ஊரே வேண்டாம் நாடே வேண்டாம் என்று இந்த ஊருக்கு
வந்துவிட்டாள். திருமணம் செய்ய நிச்சயித்து, ஏற்பாடுகள் எல்லாம்
சிறப்பாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அவன் இறந்ததால் விரக்தியில் கொஞ்ச
நாட்கள் வாழவே பிடிக்காமல் இருந்தாள். போனில் பேசும்போதெல்லாம் அம்மாவின்
வறட்டு இருமல் சத்தத்தில் சுயநினைவு திரும்பிவள், இப்போது வாழ்வதே
அம்மாவுக்கும் தம்பிக்காகவும் தான். சம்பளத்தில் கொஞ்சம் இவளுக்கு.. மீதி
அம்மாவின் மருத்துவ செலவுக்கும் தம்பியின் காலேஜ் பீசுக்கும்.
ஏதோ
ஒரு பார்ட்டியில் மார்கோவை பார்த்து பிடித்துப்போக, அப்போதிலிருந்து
லிவிங் டு-கெதர். அவனுக்கு கல்யாணமாகி குழந்தையும் இருக்கிறது என்று அறிந்த
பிறகு, இவள் கோபித்துக்கொண்டு சண்டையெல்லாம் போடவில்லை. போட
முடியாதென்றும் தெரியும். அடுத்த சில நாட்களில் இவளும் வேறு சில புதிய
"நண்பர்களை" ஏற்படுத்திக்கொண்டாள். மார்க்கோ இதை கண்டுகொண்டதாகக் கூட
தெரியவில்லை. இந்த வீட்டிற்குள் வந்துவிட்டால் உனக்காகவே நான் எனக்காகவே நீ
என்று இருந்ததால் பிரச்சனை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
---
இந்த ஊருக்கு வந்து 5 மாதங்கள் ஆகியிருந்த நிலையில் ராஜவேலின் உடல்நிலை திடீர் திடீரென சரியில்லாமல் போய்க்கொண்டிருந்தது. இரவானாலே அந்தக் கனவும், வயிறு வலியும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
சரியான தூக்கம் இல்லாததால் கண்ணிற்கு கீழே கருவளையம் விழுந்திருந்தது. இளைத்துவிட்டான்.
ஆனால், டாக்டர்களோ எல்லா டெஸ்ட்டும் எடுத்துவிட்டு ரிப்போர்ட்களைப் பார்த்து எந்தப்
பிரச்சனையும் இல்லை என்றார்கள்.
காலையில்
வலி எதுவும் இருக்காது. அலுவலகம் போவான். இரவு வந்து கட்டிலில் படுத்தவுடன் ஆரம்பிக்கும் வயிற்றுவலி, நேரமாக ஆக அதிகமாகும்.
அதையும் மீறி தூங்கினால் அந்தக் கனவு வரும். இந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவு
ஒரு கனவு கண்டானே, அதே பயங்கரமான கனவு. அரைகுறை ஆடையுடன் ஒரு பெண்ணுடன் இருக்கையில் திடீரென
யாரோ ஒருவன் வந்து இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுடுகிறான்.
வயிற்றில் குண்டு பாய்ந்து, குடல் வெளியே சரிந்து ஏகத்துக்கும் ரத்தம்
போக, இவன் சம்பவ இடத்திலேயே இறக்க, அந்தப் பெண் ஆஸ்பத்திரியில் 2 நாள்
ICU-வில் இருந்து சிகிச்சை பலனில்லாமல் இறப்பதாக கனவு. சில சமயம் இதுவே, துப்பாக்கிச் சூடு இல்லாமல், ஜன்னல் வழியே ஒரு கை வந்து இவன் வயிற்றில் ஏதோ செய்ய, வலி உச்சத்தை தொடும். அந்த சில நாட்கள் அமாவாசை என்பதை ராஜவேல் அறிந்திருக்கவில்லை.
என்னதான் உடல்நிலை சரியில்லை என்றாலும், பகலில் வயிற்றுவலி இருக்காதென்பதால்
வேலையில் கவனத்துடன் இருந்து ஆபீசில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல்
ஓட்டிக் கொண்டிருந்தான். எல்லா நாளும் 2 நிமிடமாவது ஊருக்கு போனில்
பேசிவிடுவான். ஒரு நாள் தப்பினாலும், அடுத்தநாள் கண்டிப்பாக பேசிவிடுவான்.
அப்பாவிடம்
வயிற்றுவலி பற்றி சொல்லவில்லை. அம்மாவிடம் சொன்னால் உடனே கிளம்பி வரச்
சொல்லிவிடுவாள் என்று தெரியுமாகையால் அவளிடமும் சொல்லவில்லை.
நண்பர்களிடம் இதைப் பற்றி பேசவும்
தயக்கமாக இருந்தது. கனவில், தான் அரைகுறை ஆடையுடன் அதுவும் ஒரு பெண்ணுடன் இருக்கும்போது ஜன்னல் வழியே ஒரு கை வந்து தன் வயிற்றில் ஏதோ செய்ய, தாங்கமுடியாத வலி வருகிறது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? கிராமத்தில் இருந்து வந்த ராஜவேலுவுக்கு அந்தக் கனவைப் பற்றி யோசித்தால் அவனுக்கே ஒரு மாதிரி கூச்சமாகத் தான் இருந்தது.
---
அப்படி
மிக்கேலாவுக்கு அறிமுகமான நண்பன் எட்வின். அந்த நாட்டில் இருந்த அமெரிக்க
கடற்படை பிரிவில் வேலை. அத்தனை ஒன்றும் அழகனில்லை. ஒல்லியான
தேகம். தோள்பட்டை வரை நீண்ட தலைமுடி. பாஸ்கெட்-பால் விளையாட்டில் கில்லி. பணி நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் குடி, பாஸ்கெட்-பால் என காலத்தை கழிப்பவன். 2
பெக்-காவது அடித்தால் தான், தன் அணிக்கு எந்த பேக்போர்டில்/பாஸ்கெட்டில் பந்து போடவேண்டும்
என்பதே தெரியுமளவுக்கு மொடாக் குடிகாரன். எட்வின் விளையாடிய ஒரு
போட்டியை பார்க்கப் போயிருந்தபோது தான் மிக்கேலாவுக்கு பரிச்சியம்.
ஒரு
விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சியாக மிக்கேலா bar-க்கு போயிருக்கையில்
எட்வின் அங்கே வர... அடுத்த கொஞ்ச நேரத்தில் 4-5 ரவுண்டுகளுக்குப் பிறகு
தன் சோகக் கதையை மிக்கேலா சொல்ல, கழிவிரக்கம் காது வழியே கசிந்துருக "ஐ லவ்
யூ.. நான் உன்னை கல்யாணம் பண்ண ஆசைப்படறேன்" என்றான்.
போதையில் உளறுகிறான் என்று நினைத்த மிக்கேலா பதிலுக்கு ஒரு போதை சிரிப்பை மட்டும் சிரித்து வைத்தாள். 2 நாள் கழித்து கொஞ்சம் தெளிவாக இருந்த சமயத்தில் மீண்டும் "ஐ லவ்
யூ.. நான் உன்னை கல்யாணம் பண்ண ஆசைப்படறேன்" என்றான் எட்வின். "சாரி, எனக்கு கல்யாண வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. நான் கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணத்திலும் இல்லை" என்றாள். ஆனால் எட்வினோ விடாப்பிடியாக கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நின்றான்.
அமாவாசை நெருங்கிக் கொண்டிருந்தது.
Comments
Post a Comment