ஜன்னலோரம்... 4

எட்வின் பாட்டில் பாட்டிலாக குடித்தான். Bar-க்குள் மதியம் நுழைந்தவன், இரவு வெகு நேரமாகியும் குடியை நிறுத்தியபாடில்லை. ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஊழியர்கள் இவன் அளவுக்கு மீறி குடித்துவிட்டதை சொல்லி, இனியும் பாட்டில் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். கோபத்தில் அவர்களை வாய் குழற திட்டிக்கொண்டே எழுந்துவன், நிற்கக்கூட முடியாமல் தட்டுத்தடுமாறி சேர்களை எல்லாம் தள்ளிவிட்டு கீழே விழுந்தான். அங்கிருந்தவர்கள் இவனை கைத்தாங்கலாக வெளியே கூட்டி வந்து ஒரு டாக்சியில் ஏற்றிவிட்டனர்.

"Navy ஆபீஸ்" என்று இவன் குழறியதை எப்படியோ புரிந்துகொண்டு ட்ரைவர் வண்டியை விட்டான். தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான். நேராக Arms ரூமுக்கு போனான். அங்கிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது சக ஊழியர் ஒருவர் பார்த்து இவனை தடுக்க முயல, குடிவெறியில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அவரை முட்டிக் கீழே தள்ளி சுட்டுவிட்டான். நல்லவேளையாக வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்ததால் உயிர் போகவில்லை.

இதற்குள் சத்தம் கேட்டு பயந்த டாக்சி ட்ரைவர், இவன் துப்பாக்கியுடன் வருவதைப் பார்த்து வண்டியை கிளப்ப முயல, புயலென வண்டியில் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி வண்டியை மிக்கேலா வீட்டுக்கு ஓட்ட சொன்னான். பின்னால் போலீஸ் துரத்திக்கொண்டு வந்தது. நள்ளிரவு.. மிக்கேலா வீட்டு முன் வண்டியை நிறுத்தியதும் 2 போலீஸ் வண்டிகள் டயரில் புகை வருமளவுக்கு பிரேக் அடித்து, அருகில் வந்து நின்றன. டாக்சி ட்ரைவர் உயிர் பிழைத்தால் போதுமென இறங்கி ஓடி அமாவாசை இருட்டில் மறைந்துவிட்டான்.
 
போலீஸ் இறங்கி சுற்றிவளைப்பதற்குள் மிக்கேலா இருந்த அடுக்கு மாடி வீட்டிற்குள் நுழைந்துவிட்டான் எட்வின். அடுத்த 2வது நிமிடம் மிக்கேலா வீட்டு கதவை உடைத்துக்கொண்டு கொலை வெறியோடு உள்ளே நுழைய, படுக்கையறையில் அரைகுறை ஆடையிலிருந்த மார்க்கோவும் மிக்கேலாவும் சத்தம் கேட்டுப் பதறி எழ, என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் "டுமீல் டுமீல்". வயிற்றில் 2 குண்டுகள் பாய்ந்து, கீழே விழுந்தான் மார்க்கோ. இப்போது மிக்கேலாவின் பக்கம் திரும்பி "டுமீல்". அவளது நுரையீரலுக்குள் புகுந்தது ஒரு குண்டு. அவள் விழப்போகும் நிலையில் மீண்டும் ஒரு "டுமீல்". முன் கழுத்தில் ஓரமாகப் புகுந்து வழியிலிருந்த 2-3 நரம்புகளை நாக்கவுட் செய்து, பின்னங்கழுத்தில் வெளியே வந்து ஜன்னல் கண்ணாடியை தூளாக்கியது  இன்னொரு குண்டு.
 
இதற்குள் போலீஸ் வந்துவிட, துப்பாக்கியை தரையில் போட்டுவிட்டு கைகளை மேலே தூக்கி சரண்டர் என்று சொல்லியபடியே தரையில் குப்புற விழுந்தான்.
 
ஆம்புலன்ஸ் வருவதற்குள் குடல் வெளியே சரிந்து ஏகத்துக்கும் ரத்தம் போயிருந்தபடியால், மார்க்கோ சம்பவ இடத்திலேயே இறந்தான். ஜன்னலோரம்...

கொஞ்சமே கொஞ்சம் நாடித்துடிப்பு இருந்தபடியால் மிக்கேலாவை அள்ளிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ICU-வில் 2 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தும் காப்பாற்ற முடியாமல் இறந்தாள்.

Crime Scene Body Stock Illustrations – 346 Crime Scene Body Stock  Illustrations, Vectors & Clipart - Dreamstime
 
---
 
அதற்கடுத்த வாரம் பகல் ஷிப்டு. இப்போதெல்லாம் ஹாலில் தூங்கிப் பழகிவிட்டதால், ஆபீஸ் முடிந்து வந்தவன், அன்று இரவு ஹாலில் படுத்துக்கொண்டான். நடு ராத்திரி வழக்கம் போல வயிற்றுவலி ஆரம்பமாக, எழுந்து தண்ணீர் குடிக்க நினைத்துப் புரண்டவன், தொபுக்கட்டீரென கட்டிலிலிருந்து கீழே விழுந்தான். அரண்டு எழுந்தான். ஹாலில் படுத்தது நன்றாக நினைவில் இருந்தது. ஆனாலும் எப்போது எப்படி கட்டிலுக்கு வந்தான் என்றே தெரியவில்லை. கண்டிப்பாக இந்த வீட்டில் ஏதோ இருக்கிறது என்று புரிந்துவிட்டது. மீதி ராத்திரியை ஹாலில் தூங்காமல் எந்த நேரம் என்ன நடக்குமோ என்று கருப்பசாமியை வேண்டிக்கொண்டே கலவரத்துடன் கழித்தான்.
 
இதற்கு மேல் இங்கே இருந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என பயந்தவன், ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்தான். காலையில் ஆபீஸ் போனதும் முதல் வேலையாக, ஒருவாரம் லீவ் வேண்டுமென்று மேனேஜரிடம் கேட்டான். பொதுவாக, 1 வருடத்திற்குள் புதிய ஆட்களுக்கு லீவ் கொடுக்கவோ ஊருக்கு அனுப்பவோ மாட்டார்கள். ஆனால் ராஜவேல் நல்ல வேலைக்காரன் அதோடு திறமையான ரிசோர்ஸ். ஓவர் டைம் எல்லாம் வேலை செய்கிறான். அதுவும் எக்ஸ்டரா எதுவும் கொடுக்காமலே என்பதாலும், அக்காவின் கல்யாணத்திற்கு என்று சொல்லி 1 வாரம் தான் லீவ் கேட்டிருந்தான் என்பதாலும் அனுமதி கொடுத்தார்கள்.
 
ஆனால் நிச்சயம் திரும்பி வரப்போவதில்லை என்ற முடிவுடன் தான் பேக்கிங் செய்தான் ராஜவேல். அன்று வேலை நாள் என்பதால் நண்பர்கள் எல்லாம் ஆபீஸ் சென்றுவிட்டது இவனுக்கு ஒருவகையில் நல்லதாகப் போய்விட்டது. இல்லையென்றால் இவன் மொத்த லக்கேஜையும் பேக்கிங் செய்வதை பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்டிருப்பார்கள். ஆபீஸிலும் போய் சொல்லியிருப்பார்கள்.
 
வீட்டை விட்டு கிளம்பும்போதே பல தடங்கல்கள். லிப்ட் வேலை செய்யவில்லை. படியில் இறங்கினான். இரண்டாவது மாடியில் இறங்கும்போது யாரோ காலைப் பிடித்து இழுப்பது போல இருந்தது. நொடியில் தடுமாறி விழ இருந்தவன் ஒருவாறு சுதாரித்து கைப்பிடியை பிடித்துக்கொண்டு சமாளித்தான். லக்கேஜோடு அவன் விழுந்திருந்தால் ஏர்போர்ட் போயிருக்க முடியாது. ஹாஸ்பிடல் தான்.

ஒருவழியாக ஏர்போர்ட்டை அடைந்து செக்-இன் செய்துவிட்டு கேட்டுக்கு அருகில் வந்து ஒரு சீட்டில் உட்கார்ந்தான். படபடப்பு குறைந்திருந்தது. கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான். சட்டென வயிறு லேசாக வலிப்பது போல் தோன்றியது. கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு கருப்பசாமியை மனதில் வேண்ட ஆரம்பித்தான்.
 
மறுநாள் அதிகாலை சென்னையில் வந்திறங்கியதும் பாதி உயிர் வந்தது போலிருந்தது. நேராக எழும்பூர். வைகை எக்ஸ்பிரஸ்ஸை பிடித்து மாலை மதுரை. இரவு வீட்டிற்கே வந்துவிட்டான். அப்பா அம்மாவிற்கோ இன்ப அதிர்ச்சி.
 
"என்னடா இப்படி திடுதிப்புனு வந்து நிக்கிறே??"
"உங்களைப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான் லீவ் போட்டுட்டு வந்துட்டேன்"
"எனக்கும் உன் நெனப்பாவே..." என்று ஏதோ சொல்ல வாயெடுத்த அம்மா, அழுதுவிட்டாள்.
 
"இன்னிக்கு ஏதோ தோணுச்சு டா.. அதான் சோத்துல தண்ணி ஊத்தாம வெச்சிருக்கேன்" என்று சொல்லி, அம்மா தன் கையால் சோற்றை உருட்டிக்கொடுக்க, அத்தனை சந்தோஷமாக சாப்பிட்டான். வயிறு லேசாக வலிப்பது போல் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து அம்மா தூங்கியவுடன் அப்பாவை மட்டும் தனியாக அழைத்து நடந்ததையெல்லாம் சொன்னான்.
 
அவருக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. பயத்தில் வியர்த்துவிட்டது. "உங்கம்மா கிட்ட மட்டும் சொல்லிடாத டா. நம்மள உண்டு இல்லைன்னு பண்ணிடுவா. நாளைக்கு அமாவாசை.. நெறஞ்ச நாள். காலையில முதல் வேலையா  அழகர் கோவிலுக்குப் போயி கருப்புக்கு ஒரு படையலைப் போட்டுடுவோம். எல்லாம் சரியாயிடும்.. நீ தைரியமா தூங்கு", என்றார். படுத்தவுடன், நிஜமாகவே வயிறு கொஞ்சம் வலிக்க ஆரம்பித்தது. கருப்பசாமியை வேண்டிக்கொண்டே உறங்க ஆரம்பித்தான்.

"நேரமாக ஆக வலி அதிகமாகும் என்றோ, அடுத்தநாள் ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எடுத்துக் பார்த்துவிட்டு வயிற்றில் 2 தோட்டாக்கள் இருக்கிறது என்று சொல்லப்போகிறார்கள்" என்றோ இப்போது இவனுக்கு தெரியாது.

"உங்கள் வீட்டில் கட்டில் அருகே ஜன்னல் இருக்கிறதா?? எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துவிடுங்கள்"... 
 
ஏனென்றால் நாளை அமாவாசை...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2