Posts

Showing posts from 2018

ஒரு ஸ்வீட் மாஸ்டரின் டைரிக்குறிப்பு

Image
சமீபத்தில் பஹ்ரைனில் இதற்குமுன் இல்லாத அளவில் மிகப்பெரிய பூஜை நடந்தது. இத்தகையதொரு மைசூர்பாகை.. இல்ல இல்ல ஹோமத்தை பஹ்ரைனில் கண்டதில்லை. 4-5 வருடக்கனவு. 1 வருடத்திற்கும் மேலான திட்டமிடல். சிறப்பான செயல்திட்டம்.. என அத்தனை சிறப்பாக அமைந்தது அந்த ஜாங்கிரி.. இல்ல இல்ல ஹோமம். கிட்டத்தட்ட 4-5 மாதங்கள் முன்பிருந்தே ரவாலட்டு இல்ல இல்ல.. யாகத்திற்கான பரபரப்பு ஆரம்பமானது. ஜூலை ஆகஸ்ட் வெகேஷன் சமயத்தில் கிட்டத்தட்ட சென்னையிலிருந்து வந்த அனைவருமே யாகத்திற்கான சாமான்களை கொண்டுவந்தனர். வந்த சாமான்களை நிகழ்ச்சிவாரியாகப் பிரித்து அட்டைப்பெட்டிகளில் அடுக்கி, யாகம் நடக்கும் கோவிலுக்கு சாமான்களை ஏற்றி அனுப்பிவிட்டு, அந்த வண்டி அங்கு சேரும் முன்பே தான் அங்கு சென்று அவற்றையெல்லாம் இறக்கி ஸ்டோரில் வைத்தார் அவெஞ்சர்ஸ்-ன் அறிவிக்கப்படாத ஹீரோ VK. ஒருவாரம் முன்பாக மளிகை சாமான்கள், இதர அத்தியாவசியப் பொருட்கள் என சேகரித்து கோவிலில் கொண்டுசேர்த்தனர். அந்த சமயத்தில்தான் நம் கதையின் நாயகனான ஸ்வீட் மாஸ்டர் (குக் மாமா) பஹ்ரைன் வந்துசேர்ந்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காமேஸ்வரன் பூர்வீகமான பாலக்காடு

பட்டர்ப்ளை எபெக்ட் - 2

Image
ICU வெயிட்டிங் ரூமில் மக்களின் சகிப்புத்தன்மையை காணலாம். கணவருக்கோ, மகனுக்கோ, தாய்க்கோ தந்தைக்கோ சிகிச்சைக்காக அட்மிட் செய்துவிட்டு புலம்பும் சொந்தபந்தங்கள் ஒருபக்கம்.. "காபி சக்கரை இல்லாம எனும் ஒருவர்.. இன்னும் 2 இட்லி போட்டுக்கங்க.. நீங்க சாப்பிட்டு தெம்பா இருந்தாதான் அவருக்கு தைரியம் சொல்ல முடியும்.. எனும் ஒருவர்" இந்த மாதிரி காட்சிகள் இன்னொருபக்கம்.. ஒரு பேஷண்டுக்கு பகலில் 2 பேர், இரவில் 1 அட்டண்டர் மட்டுமே அனுமதி. ஆனால் பகலில் வெயிட்டிங் ரூம் நிரம்பி வழியும். இரவில் சில பேஷண்ட்களுக்கு அட்டண்டரே இல்லாமல் இருந்ததும் உண்டு. அப்பா.. நல்லாத்தான் இருந்தியேப்பா.. திடீர்-னு நெஞ்சுவலி வந்திருச்சேப்பா என ஆபரேஷன் தியேட்டருக்குள் அப்பாவை அனுப்பிவிட்டு அழுது புலம்பும் மகன், வண்டிய மெதுவா ஓட்டுடா-ன்னு தினமும் சொல்லுவேன்.. அந்த ரூட்டுல லாரிங்க வேற கண்ணுமண்ணு தெரியாம ஓட்டுவானுங்க.. எப்படியாவது என் புள்ளையா காப்பாத்து கடவுளே எனப்புலம்பும் தாய், ICU-விற்கு உள்ளே போய் தன் கணவரைப் பார்த்துவிட்டு வரும்போதெல்லாம் அழும் அந்த யாரோ ஒருவருடைய மனைவி, அப்பாவுக்காக இரவு ஹாஸ்பிடலில

பட்டர்ப்ளை எபெக்ட்

Image
ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை அதிர்வுக்கும் ஒரு பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்பது கேயாஸ் தியரி என்று தசாவாதாரத்தில் உலகநாயகன் பேசும் வசனம் உண்டு. கேயாஸ் தியரி உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால் பிளைட் லேட் ஆவதற்கும் ஹாஸ்பிட்டலுக்கும் தொடர்பு உண்டு என்று தெரிந்துகொண்டது நவம்பர் மாதம். தங்கமணியின் அப்பா அம்மாவுக்கு, பஹ்ரைன் - சென்னை சென்றுவர டிக்கெட் போட்டாயிற்று. ஆனால் நேரடி பிளைட்டில் சீட் இல்லாததால் அமீரகம் வழியாக ட்ரான்சிட்டில் டிக்கெட் ஏற்பாடு செய்தோம். அந்த நாளும் வந்தது. பிளைட்டும் கிளம்பியது.. ஆனால் தாமதமாக. பஹ்ரைன் அமீரகம் பிளைட் லேட்டானதால் இவர்களால், அமீரகம் சென்னை பிளைட்டை பிடிக்க இயலாமல் போனது. மாற்று ஏற்பாடாக உடனே இவர்களை கோவை பிளைட்டில் அமர்த்திவிட்டனர் நிறுவனத்தினர். விமானம் கிளம்ப 10 நிமிடம் இருக்கும்போதுதான் எங்களுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள். உடனே கோவை டு சென்னை ட்ரெயினில் டிக்கெட் புக் செய்து, அடுத்த பத்தாவது நிமிடம் அவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டோம். கோவையில் இறங்கியது முதல், ரயில்வே ஸ்டேஷன் செல்லும்வரை என்ன செய்யவேண்டும் என அவர்களிட

அப்பாவி ரங்கமணிகளுக்கு அடிபொலி டிப்ஸ்

Image
தங்கமணியிடம் சிக்கித்தவித்து அல்லல்படும் (என்னைப் போன்ற) அப்பாவி ரங்கமணிகளே... ஸ்கூல் லீவ் விட்டு 1 மாசமாச்சு.. தங்கமணி வெக்கேஷன் போயி 1 மாசமாச்சு.. இப்போ வந்து இந்த மாதிரி டிப்ஸ் குடுக்கறீங்களே என்பவர்களுக்கு, எனக்கு வெக்கேஷன் ஆரம்பமாகி 2 நாட்கள் தான் ஆகிறது. நாம் அலுவலகத்தில் லீவ் எடுத்துக்கொண்டு வெக்கேஷன் போனால் தான் வெக்கேஷன் என்று அர்த்தம் இல்லை. தங்கமணியும் குழந்தைகளும் மட்டும் ஊருக்குப் போவதாக ஏற்பாடாகி, ரங்கமணிகளுக்கு ஜாக்பாட் அடிக்கக்கூடும். இதுவும் நமக்கு வெக்கேஷனே. முதலில் அவர்கள் ஊருக்குப் போவதற்கு 1 வாரம் முன்பாகவே தொடங்கி கொஞ்சம் சோகமாக இருப்பது போல காட்டிக்கொள்ள வேண்டும். அவர்களை பிரிந்து எப்படி இருக்கப் போகிறோமோ என்று சில பல பிட்டுக்களை அவ்வப்போது சொல்லிவைக்க வேண்டும். ஆனால் இது ஓவர்டோஸாகிப் போனால், சரி.. நீங்களும் வந்திருங்க என்பது போலவோ, நாங்க மட்டும் எதுக்குங்க போகணும்.. நீங்க வேற இங்க தனியா கஷ்டப்படுவீங்க என்பது போலவோ எதிர்மறை விளைவுகள் வரக்கூடும். எனவே, பிட்டுகள் அளவாக இருத்தல் நலம். ஊருக்கு கிளம்பும் அன்று எந்த சச்சரவுகளுக்கும் இடம் கொடுக்கக

குறுந்தாடி

Image
தாடி மீசைக்கும் நமக்கும் ரொம்ப தூரம். வின்னர் படத்தில் வடிவேலு சொல்வது போல், வண்டி "மை"-ல மீசை வரைஞ்சதுக்கே புழுதி-ல விட்டுப் பொரட்டிட்டு இருக்காங்கே கதை தான். ஆனாலும் அவ்வப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மீசை தாடியை வைத்து சர்க்கிள் பியர்ட் (குறுந்தாடி) முயற்சிப்பது வழக்கம். கல்லூரி நாட்களில் மீசை வைத்திருந்தேன். முதல் பாஸ்போர்ட்டில் கூட எனக்குப் பிடித்த சிவப்புக் கலர் சட்டையில் எடுத்துக்கொண்ட மீசையுடன் கூடிய போட்டோ-தான் இருக்கும். கல்யாணத்திற்குப் பிறகு மீசை இருந்தால், ஆணவம் ஆணாதிக்கம் போன்ற எண்ணங்கள் தலைதூக்கி, அடி வாங்கினால் கோபப்படவோ  திருப்பி அடிக்கவோ தோன்றும் என்பதாலேயே ட்ரிம் அல்லது ஷேவ் தான். இருக்கும் கொஞ்சநஞ்ச மீசை தாடியாவது ஒழுங்காக வளர்ந்திருந்தால் பரவாயில்லை... சீரான இடைவெளியில் இல்லாமல் ஒரு இடத்தில அடர்த்தியாக, இன்னொரு இடத்தில புதிதாகப் போட்ட மொஸைக் தரை போல இருக்கும்பட்சத்தில் மொத்தமாக இல்லாமலிருப்பதே நலம். மீசை தாடியில் விதவிதமாக அலங்காரம் செய்பவர்களைக் கண்டால் கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். அதிலும் இந்த No Shave November என்று சொல்லி முகம் முழுக்

எலி வேட்டை

Image
   The Walk படத்தில், கம்பி/கயிற்றில் நடப்பது போல ஒரு அளப்பரிய சாகசம் செய்து கேபிள் வயர் வழியே கோகுல் வீட்டிற்குள் வந்தது அந்த எலி. ( இது சின்ன பட்ஜெட் படம் என்பதால், கிராபிக்சில் சில பல சித்து வேலைகள் செய்து, பிறகு எலி பாதி தூரம் கடக்கும்போது கீழே விழுவது போல ஒற்றைக் கை/காலில் தொங்கி பிறகு மீண்டும் கயிற்றை பிடித்து நடப்பது போல நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்) அது தானாக வந்ததா, அல்லது தான் ஆபீஸ் ட்ரிப் போவதால் சுதாவுக்கு துணையாக இருக்கட்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலே கோகுல் கொண்டுவந்து விட்டதா என்ற கேள்வி எழாமல் இல்லை. முதல்நாள் கிச்சனில் இருந்த உருளைக்கிழங்கு, வெங்காயம் இவைகளை கொஞ்சம் கடித்து வைத்து, தான் வந்திருப்பதை அடையாளப் படுத்தியது எலி. ஆனால் சுதா ஒன்றும் அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் அதுவும் மைலாப்பூரில் வளர்ந்த பெண்ணாயிற்றே.. இந்த மாதிரி சாதாரண எலிக்கெல்லாம் பயப்படுவாரா என்ன என நீங்கள் நினைத்தால், அது கதாசிரியரின் தவறல்ல. இரண்டாம் நாள் பிரிட்ஜ் இருக்கும் அறையில், எலியும் நோக்கினார் சுதாவும் நோக்கினார் ரேஞ்சுக்கு, நேருக்கு நேர் சந்திக்க,

எதிராத்து துளசி

Image
எதிர் வீட்டுக்கு ஸ்ரீராம் மனைவி மக்களுடன் குடித்தனம் வந்திருக்கார். பேருக்கேத்தா போலவே, லவ குசா மாதிரி 2 ஆம்மனாட்டி பசங்க. அவ்வப்போது வீட்டுக்கு வந்து போவார். அவர் வீட்டம்மணியும் எங்காத்து தங்கமணியும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டா. கேக்கவா வேணும்.. இவா லூட்டியில மொத்த பில்டிங்கும் ஏக களேபரம் தான். ஸ்ரீராமன் பேருக்கேத்தா மாதிரி ஏகபத்தினி விரதனா இருப்பார்-னு பாத்தா, அப்பறமாதான் தெரிஞ்சுது அவருக்கு எங்காத்து துளசி மேல ஒரு கண்-னு. துளசி அத்தனை அர்த்தபுஷ்டியா இல்லேன்னாலும், ஓரளவுக்காவது பாக்கற மாதிரிதான். ஒரு சமயம் அவர் துளசியைப் பாக்கறதை நான் பாத்துட்டேன். உடனே ஏதேதோ காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டார். அன்னிலேர்ந்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அதுக்கு அப்பறம் நான் இருக்கற சமயத்திலே வீட்டுக்கு வர்றதையே அவாய்ட் பண்ணிடுவார். வந்தாலும் 5-10 நிமிஷத்துக்கு மேல இருக்கறதில்லை. இந்த சின்ன சமயத்திலயும் துளசியைப் பாக்க அவர் தவறியதில்லை. அதை நானும் பாக்க தவறியதில்லை. நான் கொஞ்சம் முறைச்சவுடனே புரிஞ்சுண்டு கிளம்பிடுவார். இதை இப்படியே விடக்கூடாது-ன்னு முடிவுபண்ணி, ஒருநாள் எங்காத்து தங்கமண

ஆண்டவன் ஸ்வாமிகள்

நேற்று காலை வரை அக்ஷதையுடன் அருளாசி வழங்கி உயர்வற உயர்நலம் பாசுரத்திற்கு விளக்கம் கொடுத்த நம் ஆசார்யன், இன்று அந்தி சாய்வதற்குள் அந்த அமரரின் அதிபதியுடன் ஐக்கியமாகிவிட்டார். சிட்டி குரூப்பில் வேலை செய்துவந்த சமயம். ஒரு வார இறுதியில் திருவயிந்திபுரம் நண்பர் ஒருவர், ஆண்டவன் அங்கு எழுந்தருளியிருப்பதாகவும், சேவிக்கப் போகலாமா என்று கேட்டார். மடத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அப்போது நம் சம்பிரதாய விஷயங்களில் அத்தனை பெரிய ஞானம் இல்லாமலிருந்த சமயம் (இப்போதும் மாற்றமில்லை). பைக்கில் சென்னையிலிருந்து திருவயிந்திபுரம் வரை செல்லும் நீண்ட பயணத்திற்காகவே ஒப்புக்கொண்டேன். (குறிப்பு: அம்மா வழியில் ஆண்டவன் சிஷ்யர்கள். மாமாக்கள் எல்லோரும் ஆண்டவனுக்கு நெருக்கம். சின்ன மாமாவின் பெயரை சொன்னால் தெரியும் அளவுக்கு பரிச்சியம் கொண்டவர்கள்) 2 நாட்கள் அவருடனே தங்கியிருந்து தேவநாதனையும் ஆண்டவன் ஸ்வாமிகளையும் திவ்யமாக சேவித்தேன். காலை வந்திருந்த அனைவருக்கும் அருட்ப்ரஸாதம் வழங்கினார். பிறகு ததியாராதனை ஆரம்பமானது. அங்கிருந்த சிலருடன் ஏதோ கேலியாக சிரித்துப் பேசிவிட்டு ஆண்டவன் ஓய்வெடுக்க அறைக்கு

தரிகெட்டுப் போனேனே...

Image
உள்ளங்கையில் 2 இடங்களில் காயம். வலது முழங்காலில் நல்ல சிராய்ப்பு. அங்கங்கே தசைப்பிடிப்பு. கைகால்களில் வலி. நான் ஏன் இப்படித் தரிகெட்டுப் போனேன்? காரணம் சிட்டி நாராயணனும், கோகுலனும் தான். பெரியவன் குங்பூ வேண்டாம். கிரிக்கெட்தான் பிடிக்கும் என்று சொன்னதிலிருந்து தொடங்கியது எனக்கு போதாத வேளை. வெள்ளிக்கிழமை காலைகளில் நண்பர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். பல நாட்களாக (வருடங்களாக) என்னை அழைத்தும் நான் பாராமுகமாய் இருந்துவிட்டேன். வியாழக்கிழமை பின்னிரவு 6 மணிக்கு (அதாவது வெள்ளி காலை 6 மணிக்கு) விளையாட அழைப்பார்கள். நித்ராதேவி சமேத சொப்பனேஸ்வரர் அருளாசியில் மூழ்கியிருக்கும் வேளையில் விளையாட அழைத்தால் பின்னே என்ன செய்வதாம்.. அதனால்தான் பாராமுகம். அதிலும் நடுவில் கொஞ்சம் காலமாக (ஜஸ்ட் 20 வருடங்கள் மட்டும்) கிரிக்கெட்டுடன் தொடர்பில் இல்லை. மற்றபடி நான் ஒரு ஸ்டார் பிளேயர். 8வது படிக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாட காலை டிபன் முடித்துவிட்டு களத்திற்கு(கிரவுண்ட்) சென்றேன். மதியம் சாப்பிட வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சென்றவன், சிக்ஸர் போர் என விளையாட்டு ஆர்வத்தில் மறந்துவ

கிச்சா / கிச்சாமி / சாமி / கிருஷ்ணஸ்வாமி

ஒரு தசாப்தமும் ஒரு வருடமும் பஹ்ரைனிலும் ஒரு வருடம் துபாய்/மஸ்கட் என மொத்தம் 12 வருடங்கள் வளைகுடா வாழ்க்கை முடித்து கிழக்கு ஆசியாவிற்கு செல்கிறார். பஹ்ரைனில், ரஞ்சனி மாமா என்றழைக்கும் வெகுசிலரில் ஒருவர். எங்களுக்கு அண்ணா / சார் / கிச்சா என தோன்றும் பெயர்களில் எல்லாம் அழைப்போம். பெரும்பாலும் ஒற்றையாய் மட்டுமே சத்சங்கம் வருவதால் அவர் குடும்பம் பற்றி அத்தனை பரிச்சியம் இல்லை. பகவத் ராமானுஜர் நாடகத்தின் வாயிலாகத்தான் அவர் மகன் ஆதித்யாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கராத்தே பயின்றதால் உடல்நலத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கும் பையன். என்ன சாப்பிடுகிறோம் அதில் எவ்வளவு எண்ணெய் இருக்கிறது எவ்வளவு கார்போஹைட்ரேட் என பார்த்து பார்த்து சாப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பான். மற்றபடி பரமசாது.. அப்பாவைப் போலவே.. கல்லூரி சேர்ந்தாகிவிட்டதால் அவனும் அம்மாவும் இப்போது சென்னைவாசிகள். நானும் சிட்டி நாராயணனும் சேர்ந்திருக்கும் சமயத்தில் மாட்டினால் கண்ணீர்விடும்வரை கலாய்ப்போம். நரசிம்மன் அண்ணா கத்தார் போனபிறகு பெரும்பாலும் கிச்சா சார் தான் மாட்டுவார். ஏதாவது சொல்லி சமாளிப்ப

பொய்யாமொழி கயல்விழி - காதல் கதை

Image
காதல் - கல்லூரிக் காலங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் கடந்து வந்திருப்போம் இந்தக் "காதலை".. இளங்கலை (UG) கல்லூரிக் காலம் தான் எத்தனை இனிமையானது.. முதல் பருவத்தின்போது அந்நியனாக பார்த்த முகங்கள் பிறகு நண்பர்களாவதும், மூன்றாம் அல்லது நான்காம் பருவத்தில் சண்டையிடுவதும், கடைசி பருவத்தில் நிகழும் Farewell நாளின்போது எல்லாரும் கட்டிப்பிடித்து கதறியழுவது என டெம்பிளேட் கல்லூரி வாழ்க்கை. நடுவே சிலபல களேபரங்கள். அதில் சிலர் வில்லனாவதுண்டு (பெரும்பாலும் ப்ரொபஸர்கள்). சிலர் ஹீரோவாவது உண்டு. ப்ரொபஸர் வில்லன் ஆனாலும் ஹீரோ ஆனாலும் அந்த பேட்ச் மாணவர்கள் கோர்ஸ் முடித்து செல்லும்வரையில் அவர் வில்லன்/ஹீரோ தான். ஆனால் கல்லூரி முடித்து வெளியே வந்தபிறகு எல்லா ப்ரொபஸர்களுமே மாணவர்களுக்கு ஹீரோ தான். படிப்பு முடித்து வெளியேறிய பிறகுதான் அவர்களிடம் அந்த இறுக்கம் குறைந்து மாணவர்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு களேபரத்தின்போது சக மாணவன் "பொய்யாமொழியை (காரணப்பெயர்) அடிச்சுட்டாய்ங்க டா" எனக் கத்திக்கொண்டே வகுப்பிற்குள் நுழைய, நண்பர்கள் அனைவரும் ஆவேசமாய்

ரசனை

ரசனை.. பாஷை ஓரளவுக்கே புரிந்தாலும் மலர் டீச்சர் என சொல்லிச் சொல்லி பேருவகை கொண்டிருந்த குரூப்பில் திடீரென ஒற்றைக் குரலாக ஒலித்த ஷெரில் பெயரைக் கேட்டு ஊர் உலகமே ஜிமிக்கி கம்மல் பாட்டைத் தேடியது.. சில நாட்கள் ட்ரெண்டிங்கில் இருந்த ஷெரில் பெயரை தொங்கலில் விட்டுவிட்டு இப்போது எல்லாரும் ப்ரியா வாரியர் பெயரை நம்பர் 1 ஆக்கியிருக்கிறார்கள். அந்தக் கண்சிமிட்டல் தான் எத்தனை எத்தனை நினைவுகளைக் கிளறியிருக்கும். எத்தனை இளவட்டங்களுக்கு போதையேற்றியிருக்கும். நினைவுகளே நிகழ்விலும் அமையப்பெற்றவர்கள், இருவருமாக சேர்ந்து அந்த நினைவுகளை அசைபோட்டுக்கொள்கிறார்கள். வெறும் நினைவுகளாக மட்டுமே அமையப்பெற்றவர்கள் யதார்த்தத்தை நினைத்து பெருமூச்சு விடுகிறார்கள். கொலவெறி பாடல் உலகளாவிய அளவில் ரசிக்கப்பட்டது. இப்போது குறும்பா-வும் சொடக்கு மேல சொடக்கும் எப்.எம்-களின் தேசிய கீதம். வெள்ளைப் பனிமூட்டத்தின் நடுவே பனி சிற்பம் போல சிலருக்கு தோன்றும் "அந்த ஒருவர்", வேறு யாருக்கோ "ப்பாஹ்" என ரியாக்ஷன் கொடுக்குமளவிற்கு இருப்பது இந்த பாழாய்ப்போன ரசனையாலே. ரோஸ் கலரில் சிலுக்கு சட்டை எ

New Year Pooja with Trump 😉

Image
டிசம்பர் 30 தொட்டே புதையா ஏரியா அல்லோலகல்லோலப்பட்டது. சிட்டி சென்டர் தாண்டினதுமே டிராபிக் ஜாம்தான். எல்லா வண்டிகளும் பம்பர் டூ பம்பர். சென்ற வருடங்களைக் காட்டிலும் இம்முறை பாதுகாப்புக்கு ஏக கெடுபிடிகள். வண்டிகளின் போல்ட் நட் வரையிலும் கூட கழட்டி சோதனை செய்தார்கள். புதையா ஹைவேயில் யாரும் தப்பித்தவறி கூட டயரை எரித்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு மாதமாகவே டயர்களை வாங்க/விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. எல்லா வண்டிகளிலும் ஸ்டெப்னிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. பழைய டயருக்கு பஞ்சர் ஓட்டினால் கூட 3 மாதம் சிறை. ஏன் இந்த தடவை இவ்வளவு கெடுபிடி? அராஜகமா இருக்கே.. போன வருஷம் பஹ்ரைன் ராஜாவே வந்தப்போ கூட இவ்வளவு கெடுபிடி இல்லையே? மக்கள் பேசிக்கொண்டார்கள். ஆம். கடந்த சில வருடங்களாகவே ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று ஷ்யாம்ஜி வீட்டு பூஜையில் வளைகுடாவிலிருந்து அரபிகளும் ஏகமாய் கலந்துகொள்கிறார்கள். அதிலும் சிலர் பஞ்சகச்சம் உத்திரியம் சகிதம். முத்தாய்ப்பாக சென்ற வருடம் பஹ்ரைன் ராஜாவே (நவீன) ரத தாசேர பதாதிகளின் புடைசூழ கலந்துகொண்டார். இவ்வளவு கெடுபிடி இருக்கே, இந்த தடவை ஸ்பெ